Donnerstag, 2. Februar 2017

பெற்ற தாய்க்கும் கற்ற தாய்க்கும்


சிவமயம்

பெற்ற தாய்க்கும் கற்ற தாய்க்கும்


என்னைப் பெற்ற தாயே! எனக்குத் தமிழ் ஊக்குவித்தாயே!
எல்லாம் கற்ற தாயே! செழுந்தமிழ் ஊட்டுவித்தாயே!
எல்லாம் வல்ல தாயே! வெள்ளை மலர் வீற்றிருப்பாயே!
செல்லத் தமிழ்த் தாயே! தமிழ் வெல்ல அருள்வாயே!

செங்கரும்பு  வெள்ளைத் தாயே! நல்ல தமிழ் அள்ளித் தருவாயே!
நல்ல தமிழ் உணர்த்துவாயே! எம் நா இனிக்க சொல்லித் தருவாயே!
எங்கள்  தமிழ் எங்குமேயே! பொங்கி வளர அருள் விதிப்பாயே!
எமைப் பெற்ற தாயையும் நாம் கற்ற தாயையும் போற்றுவோமே!



  
யாழ் இசைத்து இனிய இசைபாடிய இசைக்கலைஞன் பாணன். அப்பெருங்கலைஞன் பெயர் இணைத்துப் பரிசாகக் கிடைத்தது யாழ்ப்பாணம். நாடெங்கும் போற்றிடக் கலைநாதம் எங்கும் கேட்டிடப்பறை முரசு தொட்டு, தவில் நாதஸ்வர, நாட்டிய நாடகங்களோடு, சங்கீத இராட்சியங்களைக் கோயில் விழாக்களோடு, திருமண நாட்களையும் அலங்கரிக்கும் அத்தனை கலைப் பொக்கிசங்களும் பொருந்திய, ஈழத்து யாழ்ப்பட்டணத்தை நிறைத்து வைத்திருக்கும் சிறுசிறு கலைக்கிராமங்களில்ச் சிறுவிளானும் ஒன்று. பெயரில்ச் சிறியதானாலும், அதனைச் சுற்றியுள்ள கலைக் கிராமங்களால் இதுவும் போற்றப்பட்டதே. இதனாலேயே சிறுவிளான் வரதன் என்ற பெயரோடு என் பன்னிரண்டாவது வயதில், சந்திரசேகரம் (கோபால்) என்ற நாடக ஆசிரியர் மூலமாக, "என் தங்கை" என்ற நாடகத்தில்க் கல்யாணி என்ற பாத்திரத்தில்,ஓர் ஊனமுற்ற சிறுமியாக ஆரம்ப அடிவைத்தேன். பின்பு தொடர்ந்து  சமூக நாடகங்கள், சரித்திர நாடகங்கள், புராண நாடகங்களென்று நடித்தேன். இதுவே ஆர்வக்கோளாறாகி, அங்கிருந்து வெளிநாடு என்று வரும்போதே, ஆர்வம் மட்டுமல்ல, கலைவளர் கலாலயம் என்ற பெயரும் என்னோடு சேர்ந்தே வந்தது.
இங்கு  நான் வந்த நொக்கத்தையும் கலைமகள் மறைத்து விட்டாள். என்னைப் பெற்ற தாயை அங்கு விட்டு விட்டு வந்த என்னால், நான் பெற்ற கலைத்தாயை இதுவரை கைவிடமுடியவில்லை.

கல்வியா? செல்வமா? வீரமா? என்ற சர்ச்சையிற்போல், கல்வியின் பக்கம் நான் சென்றதால், செல்வம் என்னை எட்டியே பார்க்கவில்லை. வீரம் தலையே காட்டவில்லை. இருந்தாலும் கலைமகளை நான் விடப்போவதில்லை. செல்வமகளை அணைத்துப் பார்த்தேன் மறுத்துவிட்டாள். வீரமகளைத் துணைக்குக் கேட்டும் பார்த்தேன் வெறுக்கிறாள். இதனால்! என்போன்ற‌ நித்திரை இல்லாமல்ச் சித்திரவதைப்படும் கலைஞர்களே! நீங்களாவது என்கூடச் சேர்வீர்களா? நிட்சயமாகச் சாதிக்கலாம்.
நான் தலைக்கனம் இல்லாமல் அடக்கத்துடன் துணிவாகச் சொல்கின்றேன். கலைப்பயணத்தில் நான் நடந்து வரும்போது கண்டுவந்த அனுபவங்கள் உண்டு. கதையாக்க அது போதும். இதில்க் கற்பனைகளையும் கலந்துவிட்டால் எப்படியான பாடல்களையும் எழுதி, எந்தக் காலத்து நெஞ்சங்களையும் கரைக்கும் அளவிற்கு, இதைக் கற்ற‌றிந்தோரிடம், நானும் கண்டு கேட்டறிந்த ஞானம் இருக்கிறது. துடிப்புள்ள இன்றைய இளைஞர்கள் தங்களைக் கட்டிக்காக்கும் அளவிற்குப் பண்பான படைப்புகளைக் கொடுக்க முடியும். ஆர்வமுள்ள மன இளமையுள்ள, ரசனைமிக்க, ரசனை வாழ்வில் அலுத்துவிடாமல் இருக்க, படைப்புகளைப் பெரும் வரப்பிரசாதமாகத் தனிமை உறவுகளும் அனுபவிக்க என் நோக்கம் எல்லோருக்கும் ஒரு தனிக்கொடை. அதனைத் தந்து உதவுகின்றேன் வாருங்கள்.

நாம் ஒன்றாகச் சேர்ந்தால் அதில்ப் பலம் தான் இருக்கும். பலவீனம் இருக்காது. நாம் முன்பு  படித்திருப்போம் இரட்டையர்கள் பற்றி! பார்க்க இயலாதவரும், நடக்கமுடியாதவரும், எப்படித் தோள் கொடுத்து உதவி, எப்படியவர்கள்,  அவர்கள் அடைய வெண்டிய இடத்தை அடைந்தார்களோ! அப்படி எங்கள் சமுதாயமும், சமூகச்சீர்கேடில்லாமல் மன உளைச்சல் இல்லாமல், மேம்பாட்டிற்கான வழிமுறைகளை, இந்தக் கலைதனைக் கொண்டே களை எடுக்கலாம். நானும் இதே சமூகத்தில்த் தான் உள்ளேன். என்னையும் சேர்த்துத் தான் களையெடுக்க விரும்புகின்றேன். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு தானே?

புத்தகங்கள், கதைகள், நாடகங்கள், பாடல்கள் எழுதியுள்ளேன், வில்லிசையும் தொட்டுள்ளேன், நடிப்பையும் விடவில்லை, ஏன்? ஒரு நல்ல சினிமாவைக் கொடுக்க முடியவில்லை. துணிந்து சொல்கிறேன், ஒரு உண்மைக் கலைஞனின் உள்ளத்திற்குள் கலையுணர்வு புகுந்துவிட்டால், அதைத் தொடர முடியாதுபோலிருக்கும் மற்றவர்களிற்கு ஏதோ சமாதி நிலை போலும் தெரியும். உண்மை அதுவல்ல. ஏதோ பேராறு, பேரிரைச்சலோடு வந்து, அந்த மௌன நிலையை உடைக்கப் போகின்றது என்பது தான் அந்த நிலையின் அடிப்படை. இதுவும் ஓர் பேராற்றலின் அமைதி நிலை தான். இதை எனக்காகச் சொல்லி என்னை புகழவில்லை. என்னை விட எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களிற்காகச் சொல்கிறேன்.
மனம் திறப்பதில்க் கஞ்சல்த்தனம் இல்லாமல் முழுமனத்தோடு எழுதுகோலையே மனச்சாட்சியாகவும், கலைமகளாகவும் எடுத்து இதை எழுதுகிறேன். நான் உங்களோடு பகிர்வது வியாபார நோக்கமல்ல, இதுவரையில் நான் பணத்தை விட்டுத் தான் பார்த்திருக்கிறேன், அது என் கையைவிட்டு விரைவாகப்  போகும் அழகையும் ரசித்திருக்கின்றேன். இதுவரையில் அதுவாக மனம் மாறி என்னிடம் திரும்பவில்லை. இருந்தாலும் நான் இதுவரையில் மனம் மாறவில்லை. சில கலைஞர்கள் மனவிரக்த்தியடைந்து நொந்து பேசுவார்கள், இந்தக் காலத்து ரசனைக்கு நாங்கள் எதுவும் கொடுக்க இயலாது, காலம் மாறிவிட்டது என்று. என்னைப் பொறுத்தமட்டில் நான் சொல்வேன் ரசனை எப்போதும் உள்ளமாதிரித்தான் இருக்கும். அதைமாற்ற எங்களால் முடியாது. இளையவர்களிடம் எப்போதும் ரசிக்கின்ற உள்ளம்தான் ஆண்டவனால்க் கொடுக்கப்பட்டிருக்கும். கொடுக்கின்ற விதத்தில் அவர்கள் உள்ளம் செயல்படத் தொடங்கும். உள்ளம் கொடுத்தது இறைவனாக இருக்கும். அதை நல்ல முறையில் வாழவைக்க  ஒரு கலைஞனால் முடியும்.
ரசிக்க உள்ளத்தைத் தந்த ஆண்டவன் அதில் வலுவையும், அறிவையும், இளையோருக்குக் கொடுத்தும் இருப்பார். அவர்களிற்கு நாம் கொடுப்பதில்தான், எமக்குப் பின்பும் எங்கள் தமிழ்க் கலாச்சாரம் மறவாத ஓர் சந்ததியினர் எம்பூட்டப்பிள்ளைகளிற்கும் கிடைக்கும். இந்த நம்பிக்கை எனக்கு நெடுங்காலமாக  இருந்து வருகின்றது. இதற்கு நான் உங்களிடம் கேட்பது ஓர் சிறிய ஒத்துழைப்புத்தான். என்னை மாதிரி வேறு யாராவது இருந்தால் நிட்சயம் இது புரியும். அந்த நம்பிக்கையில்த் தான் எழுதுகின்றேன். எதிர்பார்க்கின்றேன்.
நன்றி
இங்ஙனம்
கலைவளர் கலாலயம்
சிறுவிளான் வரதன்



Bilder - Quelle: wikimedia.org,